புவனேஷ்வர்: நாடு தழுவிய ஊரடங்கு முடிய 5 நாட்களே உள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்.,14ம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கினை மேலும் நீட்டிக்குமாறு மாநில அரசுகள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் 11ம் தேதி ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அன்றைய தினம், ஊரடங்கு நீட்டிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இன்று (ஏப்.,09) நடைபெற்ற ஒடிசா மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளதாவது: கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஏப்.,14 வரை இருந்த ஊரடங்கு ஏப்.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒடிசாவில் ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிலையங்களும் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.